Saturday 27 February 2021

கோமளவல்லி காணும் பொங்கல்










 பிரளயத்தின்போது வேடன் வடிவில்  வந்த ஈசன், அமுத குடத்தின் மூக்கை உடைக்க, அமுதம் கீழே பரவி ஓடியது. அந்த அமுதம் இரண்டு இடங்களில் தேங்கி நின்றது. ஒன்று குடந்தை  மகாமகக் குளம். மற்றோர் இடம் சார்ங்கபாணி ஹேம புஷ்கரணி எனும் பொற்றாமரைக் குளம். மகாமகத்தின்போது இந்த பொற்றாமரைக் குளத்தில்  நீராடுவதும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. இதன் கரையில் தாயாரை வளர்த்த ஹேம மகரிஷிக்கு சந்நதி ஒன்று உள்ளது.தனிக் கோயில்  நாச்சியாராக, தனி சந்நிதானம் கொண்டு கோமளவல்லி நாச்சியார் சேவை சாதிக்கிறார். கோமளவல்லி என்பதற்கு, தமிழில் பொற்கொடி என்று பொருள்.  ஸ்ரீகோமளவல்லி தாயாரின் அவதாரத் தலமானதால் தாயாரை வழிபட்ட பிறகே பெருமாளை தரிசிப்பது இங்குள்ள நடைமுறை.ஸ்ரீகோமளவல்லி தாயாருக்கு ‘படிதாண்டா பத்தினி’ என்ற பெயரும் உண்டு.



இவர் கோயிலை விட்டு வெளியே வர மாட்டார். காணும் பொங்கல் அன்று மட்டும் தாயார் கோயிலின் உட் பிராகாரத்தில் எழுந்தருளி வலம் வந்து  பொற்றாமரைக் குளத்தை அடைந்து அவர் பிறந்த வீட்டில் கனு வைப்பதாக ஐதீகம். அன்று ஊரில் உள்ள கன்னிப் பெண்கள், சிறுமிகள் மற்றும்  சுமங்கலிகள் உட்பட எல்லோரும் பொற்றாமரை குளத்துக்கு வந்து, தாயாருடன் சேர்ந்து கனு வைக்கும் வைபவம் கோலாகலமாக நிகழும்.




17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கரின் குருவும், ஆஸ்தான புலவருமான உ.வே. ஐயா குமாரதாதாசார்யர் என்பவர்  சார்ங்கபாணியிடம் பெரும் ஈடுபாடு கொண்டு, திருப்பணிகள் பலவற்றைச்செய்துள்ளார்.தாயாருக்குத் தனிச் சந்நதி அமைக்க வேண்டுமென விரும்பி,  அதற்காக நாயக்க மன்னரின் உதவியுடன் ஸ்ரீஆராவ முதனின் தெற்குப் பிராகாரத்தில் சந்நதி அமைத்ததும் தாதாச்சார்யரே. அதற்காக தாயார்  சந்நதியின் எதிரே அன்னையை தரிசிப்பதுபோல் தாதாச்சார்யரின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். இவரின் சீடரே ஸ்ரீலட்சுமி நாராயணசுவாமி.

தைத் திருவிழாவின்போது திருமண நாள் நினைவாக கோமளவல்லித் தாயாருக்கு இங்கு மாலை மாற்று விழா சிறப்புடன் நடக்கிறது.இங்குள்ள உற்சவ மூர்த்தி மிக அழகு! இவர் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் (சார்ங்கம்), உடைவாள் ஆகிய ஆயுதங்களுடன் வலது திருக் கை அபய  ஹஸ்தத்துடன் ஐம்பொன் சிலையாகஎழுந்தருளியிருக்கிறார். தமிழ்நாட்டில், திருவாரூர் தேர் அளவில்முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்  இரண்டாவதாகவும், திருக்குடந்தைத் தேர் மூன்றாவதாகவும் இடம்பெற்றுள்ளன.ஏழாம் நூற்றாண்டில் சார்ங்கபாணி பெருமாளுக்கு சித்திரைத் திருத்தேர்  என்ற மாபெரும் தேரைச் செய்து வைத்து ‘திருவெழு கூற்றிருக்கை’ என்ற பிரபந்தத்தைப் பாடி அருளினார் திருமங்கையாழ்வார் என்பது வரலாறு.இங்கு சித்திரைப் பெருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். மாசியில் பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். வைகுந்த ஏகாதசி  அரையர் சேவை சிறப்புடையது.




ஹேம ரிஷியின் நினைவாக இங்குள்ள பொற்றாமரைக் குளம் ஹேம புஷ்கரணி எனப்படுகிறது. சுமார் 360 அடி நீளம், 285 அடி அகலம் கொண்ட  இந்தக் குளக் கரையில் ஹேம முனிவருக்கு சிறிய சந்நதி ஒன்று இருக்கிறது. இதை விட ஆதியில் பெரிதாக இருந்ததாம் இந்தத் தீர்த்தம். இப்போது  சுருங்கி விட்டதாம். இதற்கு லட்சுமி தீர்த்தம், அமுதவாணி என்ற பெயர்களும் உள்ளன.முதலில் ஹேம ரிஷி சந்நதியில் வணங்கி, குளக்கரையில்  உள்ள மற்ற தெய்வங்களையும் தரிசித்து விட்டு, வடக்கே உள்ள தல விருட்சமான பாரிஜாதத்தைத் தொழுது, கடைசியாக பெருமாளையும் சேவித்த  பிறகு இதில் நீராட வேண்டும் என்பது நியதி.மாசி மகம், இங்குள்ள எல்லா சிவ-விஷ்ணு கோயில்களிலும் பெரிய உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.  12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் கும்பகோணத்தின் மற்றொரு சிறப்பு.

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் அட்சயத் திருதியை அன்று, கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் 12 கருட சேவை விழா  கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் மற்றும் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள விஷ்ணு ஆலயங்களிலிருந்து பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி  நாள் முழுக்க தரிசனம் தருவார். அப்போது இங்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமபிரானோடு ஸ்ரீசார்ங்கபாணி நடுநாயகமாக எழுந்தருள்கிறார்.வேறெங்கும் இந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை.இங்கு தை மாதத்தில் நடைபெறும் மட்டையடி உற்சவம் புகழ் பெற்றது. சார்ங்கபாணியர், ஓர்  இரவு தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கோயிலில் இருந்து வெளியேறியதால் கோபமுற்ற தாயார் அவரை மீண்டும் கோயிலுக்குள் நுழைய  விடாமல் கதவை அடைத்து விட்டார். நம்மாழ்வார் தலையிட்டு இவர்களுக்கு இடையிலான ஊடலைத் தீர்த்து வைத்த நிகழ்ச்சியே இந்த மட்டையடி  உற்சவம்.

எந்தப் பாவமும் காசிக்குச் சென்றால் தொலையும்; காசியில் செய்த பாவம் திருக்குடந்தையில் அழியும். திருக்குடந்தையில் செய்த பாவம் வேறெங்கும்  தீராது; இங்கேயே தீர்க்க வேண்டும் என்பது ஐதீகம்.சார்ங்கபாணி பெருமாளை ஒரு முறை சேவித்தாலே பிரம்மஹத்தி போன்ற தோஷங்கள்அகலும்.சார்ங்கபாணி கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டால், பயணத் தின்போது, இக்கட்டில் சிக்கிக்  கொள்ளாததுடன், பயம் மற்றும் மரண பயத்தில் இருந்தும் மீளலாம். பெருமாளின் பிரசாதம் சக்கரம் போல் பக்தர்களை பாதுகாக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு முறை இந்தத் திருக்கோயிலுக்கு ஆபத்து வந்தபோது மொத்தக் கோயிலையும் வைக்கோலுக்குள் திரையிட்டு மறைத்து வைத்துக் காப்பாற்றினார்  மெய்க்காவலிடையர் என்ற அடியார். தேரோட்டம் முடிந்து தீர்த்தவாரியானதும், சுவாமியும் தாயாரும் மெய்க்காவலிடையருக்கு தீர்த்த மரியாதை  அளித்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.இதன் நினைவாக இன்றும் கும்பகோணத்து அருளிச் செயல் கோஷ்டியில், திருக்கோஷ்டியூர் பாசுரம் ஒன்று  ஓதப்படுகிறது.ஸ்ரீரங்கம்- அரவணை பிரசாதம் போன்று சார்ங்கபாணி பெருமாளுக்கு ‘கும்மாயம்’ படைக்கப்படுகிறது. பாசிப் பருப்பு, வெல்லம் மற்றும் பசு  நெய் சேர்த்து தயார் செய்யப்படுவதே இந்தக் கும்மாயம். இதை தினமும் புதிய மண் கலத்தில் சமைக்கிறார்கள்.

கும்மாயம்


பாசிப்பருப்பு     -அரை கிலோ
வெல்லம்         - முக்கால் கிலோ
முந்திரிப்பருப்பு     -100 கிராம்
பசு நெய்         - 400 கிராம்
ஏலக்காய் தூள்     -2 ஸ்பூன்

செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுத்து குழைய வேகவைத்து மசித்துக் கொள்கிறார்கள். வெல்லத்தைப்பொடித்து கரைத்துக்  கொதிக்க வைத்து தூசி அழுக்கை நீக்கி மீண்டும் கொதிக்க வைத்து கெட்டிப்பாகு பதத்தில் வேகவைத்து மசித்த பயற்றம்பருப்புக் கலவையில் கொட்டி  நன்கு கலந்து கெட்டிப்பட்டதும் பசு நெய்யில் முந்திரி, ஏலக்காய் பொடியைத்தூவி கலந்து  நிவேதிக்கின்றனர். மண மணக்கும் கும்மாயம் பிரசாதம்  தயார்.

No comments:

Post a Comment