Saturday, 5 September 2020

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

 சஞ்சயன், மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டியும்ஆலோசகனும் ஆவார். சஞ்சயனின் குரு, வேத வியாசர் ஆவார். பாண்டவர்கள் வனவாசத்திற்கு பின் மன்னனின் சார்பாக தூது சென்றவர் சஞ்சயன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரித்தார். மன்னனும் காந்தாரியும் குருஷேத்திரத்தில் நடக்கும் போரில் நடப்பவற்றை அறிய, சஞ்சயனுக்கு போரினை ஹஸ்தினாபுரத்தில் இருந்தே காணும் ஆற்றலை வேத வியாசர் அருளினார்.  பகவத் கீதையும் இவர் மூலமே மொழியப்படுகிறது.


சஞ்சயன் போரில் நடந்தவைகளை, உள்ளதை உள்ளபடியே விவரித்தார். கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறினார். எவர்க்கும் கிடைக்காத காட்சி, பகவானுடைய விஸ்வரூபத்தை அர்ஜுனனோடு சேர்ந்து தரிசிக்கும் பாக்கியம் சஞ்ஜயனுக்கு மட்டுமே கிடைத்தது. அதையும் அவர் மறுபடியும் மறுபடியும் நினைத்து பெரு வியப்பும் பெருமகிழ்ச்சியும் அடைந்தார்.  
Vishwaroop!


மன்னன் ஒரு நாள் சஞ்சயனிடம், போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று வினவ, அதற்கு சஞ்சயன், சிறிதும் தயங்காமல் :

யத்ர யோகேஸ்வரக்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர: |
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி: த்ருவா நீதிர் மதிர் மம || 

“எங்கு யோகேஸ்வரனான கிருஷ்ணன் இருக்கிறானோ, எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலக்ஷ்மியின் கடாட்சத்தோடு வெற்றியும், அழியாத செல்வமும், நீதியும் நிச்சயமாக இருக்கும்.” – என்றார்.

பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அமைதிக்கான தூது படலம் நடந்து கொண்டிருந்த நேரம், இந்திரப்ரஸ்தம் மட்டுமாவது பாண்டவர்களுக்கு வழங்குமாறு தர்மன் கேட்க, பேராசை கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன் துரியோதனன் மீதுள்ள பாசத்தால்,  அதை மறுத்து விடுகிறார். இச்செய்தியை பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும் பக்குவமாக எடுத்துக் கூற சஞ்சயனை அனுப்பி வைத்தார் மன்னன் திருதராஷ்டிரன்.

போர் நிச்சயம் என்பதையும், மன்னன் திருதராஷ்டிரனின் புதல்வர்கள் மடிவார்கள் என்பதையும் நன்கு அறிந்த சஞ்சயன், மன்னன் மீதுள்ள மரியாதை, தன் கடமை மீது கொண்டுள்ள பக்தி மற்றும் கிருஷ்ணன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக அச்செய்தியை பாண்டவர்களிடமும் கிருஷ்ணனிடமும் கொண்டு சேர்த்தார்.

சஞ்சயன் அரண்மனை வந்த நேரம், கிருஷ்ணன், தனது படுக்கையறையில், சத்யபாமா மடியில் தலை வைத்து, தன் இரு பாதங்களை அர்ஜுனனின் மடி மீது நீட்டி, அவரது படுக்கையில் படுத்திருக்க, திரௌபதி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். சஞ்சயன் வந்திருந்த செய்தி கேட்டதும், கிருஷ்ணன் – “சஞ்சயனா! உள்ளே அனுமதியுங்கள்! நமது உறவின் நெருக்கத்தை கண்டு விட்டு துரியோதனனிடம் சென்று கூறட்டும். அப்பொழுதாவது துரியோதனன் யோசிப்பானா என்று பார்ப்போம்! மன்னனும் மற்றவர்களுமாவது உணர்ந்து கொள்வர்.”, என்றார்.

உண்மையில், அந்தரங்க அறைக்குள் அந்நியர்கள் நுழைய கூடாது என்றாலும், அர்ஜுனனும் திரௌபதியும் அங்கிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சஞ்சயனுக்கும் அப்பாக்கியம் கிட்டியது என்றால் அர்ஜுனனுக்கு நிகராக சஞ்சயனை கிருஷ்ணர் மதித்தார் என்றல்லவா பொருள்! சஞ்சயனின் பணிவு, நம்பகத்தன்மை, கடமையில் கொண்டுள்ள பக்தி, உண்மையை எடுத்துக்கூறுவதில் உள்ள தைரியம், தன் மன்னன் தவறான பாதையில் சென்றாலும் அதை தைரியமாக எடுத்துக்கூறியும், தன் கடமை மறவாது அம்மனனுக்கே உண்மையாக கடமையாற்றுவதும் என அவரது குணங்கள் கிருஷ்ணனை ஈர்த்ததால் சஞ்சயனுக்கு இக்காட்சியைக் காண அருளினார்.

No comments:

Post a Comment